தலைமேல் எப்பொழுது குண்டு விழுமெனத் தெரியவில்லை.
ஊரைவிட்டு, பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு, ஆடு கோழி நாய்களுடன் கிடைத்த சாமான்களை அள்ளிக் கொண்டு பிஞ்சுக் குழந்தைகள் முதல் கோலூன்றி நடக்கும் முதியவர் வரை..

கூட்டம் கூட்டமாக..சொந்த நாட்டிலேயே அகதிகளாக இடம் பெயரும் மக்கள்.
மழைக்காலம். போதுமான சுகாதார வசதிகளின்றி கூட்டமாக ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள்.
எந்த நேரமும் தொற்று நோய் பரவும் ஆபத்து. பரவினாலும் சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் இல்லை.
கொத்து கொத்தாக விழும் சாவுக்கு நடுவே வாழ்வைத் தேடும் அவலம்.
இத்தனையும் போதாதென்று..

தாயாய் அரவணைக்க வேண்டிய நாடே கொல்ல ஆயுதமும் கற்றுக் கொடுக்க ஆளும் அளிக்கிறது.
அதைக் கொண்டு தன் மக்களை மட்டுமல்லாது.. ஆயுதம் கொடுத்த நாட்டின் மக்களையே சுட்டுக் கொல்கிறான்...
இவை எல்லாம் எங்கோ கண்காணாத் தொலைவில் நடக்கவில்லை. இதோ நமக்கு மிக அருகில்..
அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்கும் மக்கள்..

உற்ற துணையாய் எண்ணியிருக்கும் தமிழகத்தில் கீற்றாய் நம்பிக்கை ஒளி.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் போராட்டம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக முடிவு.
மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
விவசாயிகள், தொழிலாளர்கள் ஏன் திரையுலகத்தினர் வரை அனைவரும் பல்வேறு வகைகளில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
தமிழகமே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது.
ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் ஆதரவு கண்டு கண் கலங்கி கைக்கூப்பி நன்றி சொல்கின்றனர்.
ஆனால்.. இந்த சமூகத்திலேயே மிக அதிக வருமான வரம்பில் இருக்கும் அய் டி மக்கள் மட்டும்..
அறிவு தளத்தில் சமூகத்தின் உச்சத்தில் நிற்பதாகச் சொல்லப்படும் நம் துறையினர் மட்டும்..
சமூகத்தின் அத்தனை நலன்களையும் பிறரை விட அதிகமாக அனுபவிக்கும் நாம் மட்டும்..
அதனாலேயே சொகுசுக் கண்டு சமூகத்தில் பிறரிடமிருந்து அன்னியப்பட்டு நிற்கும் நாம் மட்டும்..
யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.
யார் எங்கு செத்தால் நமக்கென்ன.
ஈழப் பிரச்னை மட்டுமா? நாட்டில் எந்த பிரச்னை நடந்தாலும்..
தொடர்பற்ற பார்வையாளர்களாக மட்டும்..
இன்று பங்குச் சந்தையின் நிலவரம் என்ன? டாலர் நல்ல விலைக்குப் போகிறதா இல்லையா?
இன்றைய இணைய அரட்டை யாருடன்? சாப்பாடு பீட்சா கார்னரிலா சப் வேயிலா? வாரக் கடைசியில் தூக்கமா சினிமாவா? இவற்றைத் தவிர வேறு சிந்தனையின்றி..
மிஞ்சிப் போனால் 'எல்லாரும் ஸ்டண்ட் அடிக்கிறாங்கப்பா' என்று கமெண்ட் அடித்ததோடு நம் கடமை முடிந்து விட்ட களிப்பில்.. சக மனிதனின் சாவை குறித்த அக்கறை சிறிதும் இன்றி..

அதைப் பற்றி சிறிதளவுக் கூட குற்ற உணர்ச்சியும் இன்றி.. வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறோம். உணர்ச்சியற்ற பிணங்களாக.
கம்யூட்டரோடு மட்டுமே உறவாடி மனிதத்தன்மை அற்று போய்விட்டதா நமக்கு ?
சுனாமி வந்த போது ஓடோடிச் சென்ற அய் டி மக்களை நான் அறிவேன்.
ஆங்காங்கே சில நல்ல இதயங்களோடு இணைந்து தங்கள் வார இறுதிகளை பிறருக்கு பயனளிக்கும் வகையில் செலவிடும் அய் டி மக்களையும் எனக்குத் தெரியும்.
ஆனால்..
அவை எத்தனை விழுக்காடு?
இந்த சமூகத்தின் வளங்களில் மிக அதிகப் பங்கை எடுத்துக் கொள்ளும் நாம் அதற்கு இணையாக சமூகத்திற்கு செலுத்துகிறோமா?
யோசியுங்கள் நண்பர்களே..

வாழ்க்கை உன்னதமானது.. நமக்கு மட்டுமல்ல.. இவ்வுலகில் வாழும் அனைவருக்கும்.
நம்புங்கள்! நம்மைத் தாண்டியும் உலகம் பரந்து விரிந்து இருக்கிறது!!!!! அதில் இன்பங்களோடு நாம் கற்பனை செய்து பார்க்கவும் இயலாத துன்பங்களும் இருக்கின்றன!
வாய்ப்பு மறுக்கப்பட்ட சிலருக்கேனும் நம்மால் உதவ முடிந்தால்.. அதைவிட வாழ்வை உன்னதப்படுத்தும் விசயம் வேறு இருக்க முடியாது!!
அது அளிக்கும் மன நிறைவை.. அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கிய வீடோ, வெளிநாட்டு காரோ நிச்சயம் தர முடியாது.
நன்றி,
அன்புடன்,
உங்களில் ஒருவன் (A Friend)...
-------------------------------------------------------------------
Forward to your friends, let them know what is happening for Tamilian at Eelam, Srilanka.
No comments:
Post a Comment