Pages

Tuesday, July 27, 2010

ஆமாம்...இல்லை....( ஒரு சிறிய முயற்சி)


காதல் அபத்தமானது என்று அவளுக்கு எப்படி புரியவைக்கபோகிறேன் என்று யோசித்து கொண்டிருக்குபோதே அவள் தொடர்ந்தாள் ஏன் என்னை உனக்கு பிடிக்கவில்லையா? எதற்கு தயக்கம் காட்டுகிறாய்.என்றாள். அப்படி எல்லாம் ஒன்றுமில்லை நமக்குள் காதல் என்று ஒன்று தேவைதானா என்றேன் என்னிடம் காதலை சொன்ன அவளிடம்.

பார் நம் இருவரும் காதலித்தால் என்னென்ன பிரச்சினை வரும் என்று கொஞ்சம் யோசித்து பார்த்தாயா? என்று நான் சொல்லி முடிப்பதற்குள்...

உனக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் நேராக சொல்லலாமே அதற்கு ஏன் இப்படி சுத்தி வளைத்து பேசுகிறாய் என்றாள் கோபமாய்.

சரி இப்போ நம் இருவரும் காதலித்தால் எப்படியும் திருமணத்திற்கு நமது வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். உன் வீட்டிலும் எதிர்ப்பு என் வீட்டிலும் எதிர்ப்பு..நமது சொந்தங்களுக்குள் சண்டை சச்சரவுகள்.. இப்படி சண்டைகளுக்கு நடுவில் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு ..பின் நம் இருவரும் சொந்தங்களை எதிர்த்து காதல்தான் பெருசு என்று தனியாக திருமணம் செய்து.......இதை எல்லாம் கொஞ்சம் நினைத்து பார்த்தாயா? இது தேவையா? என்றேன்.

அதற்கு அவள் நீ ஏன் இப்படி யோசிக்கின்றாய்? நம் காதல் வீட்டின் சம்மதத்தோடு திருமணத்தில் முடியும் என்ற நம்பிக்கையில் காதலிக்கலாமே என்றாள்.

நான் சொல்வது அந்த மாதிரி சுமுகமாக திருமணம் நடக்கவில்லை என்றால் எவ்வளவு பிரச்சினை என்றுதான். என்றேன்..... அவள் தலையை குனிந்து கொண்டாள்.

அப்படியே நாம் வீட்டை எதிர்த்து தைரியமாக திருமணம் செய்து கொண்டாலும் அதற்கு பிறகு நாம் வாழப்போகும் வாழ்க்கையில் சந்தோசம் இருக்கும் என நீ நினைக்கின்றாயா? சொந்த பந்தங்களின் பாசம் தொடர்பு இல்லாமல் தனியாக வாழ்க்கை நடத்துவது எனக்கென்னவோ அவ்வளவு நல்லா இருக்கும் என தெரியவில்லை. என்றேன்.

அப்படியே நாம் காதல் திருமணம் செய்து கொண்டாலும்... என்ன நன்றாக இருந்தால் சந்தோசமாக ஒரு ஒரு வருடம் இருப்போம். அதற்குள் நமக்குள் சில பிரச்சினைகள் வரலாம். அப்படி பிரச்சினை என்று வந்தால் உனக்கு அல்லது எனக்கு உதவி செய்ய அல்லது மனதளவில் ஆறுதல் சொல்ல கட்டாயம் நம் சொந்தங்கள் தேவை. என்றேன்.

அவள் உடைந்த குரலில் கடந்த சிலமாதங்களாக நான் காதலால் மனதளவில்,கனவுகளில் உன்னோடு வாழ்ந்து இருக்கின்றேன் இப்போது நீ இப்படி சொல்லுகிறாய் என் நிலைமையும் கொஞ்சம் யோசித்து பார் என்றாள்.

அதில் என் தவறும் இருக்கின்றது..., இதற்க்கு நானும் ஒருவிதத்தில் காரணமாக இருந்து இருக்கின்றேன். ஆனால் நீ சொல்லும் இந்த காதல் கனவுகள்,கற்பனை உலகம் எல்லாம் நம் உடம்பில் உள்ள ஹார்மோன்கள் செய்யும் வேலைதான். அது உனக்கு தெரியுமா. நம் சுஜாதா கூட அப்படித்தான் சொல்லி இருக்கின்றார். காதலே ஹார்மோன்களின் விளையாட்டுதான் அதை தவிர வேறொரு விசயமும் இல்லை என்பதுதான் அவர் கருத்து. இதன் பாதிப்புகள் எல்லாம் போக போக நாளடைவில் சரியாகிவிடும்.என்றேன்.

அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லி இருக்கட்டும்.ஆனால் நீ என்னிடம் இப்படி சொல்லுவது என்னால் தாங்க முடியவில்லை. என்றாள்

பார் நான் உன்னை காதலிப்பதில் ஒன்றும் பிரச்சினை இல்லை ஆனால் அதற்க்கு பிறகு வருவதைத்தான் கொஞ்சம் நினைத்துப்பார்க்க சொல்லுகிறேன்.நம் வீட்டில் சம்மதித்தால் இருவருக்குமே ஒரு பிரச்சினையும் இல்லை...நாம் இருவரும் காதலித்துவிட்டு பின் நம் வீட்டில் மறுத்து,அவர்களை தவிர்த்து திருமணம் செய்து,... அதற்க்கு பிறகு வரும் பிரச்சினைகளை யோசித்து பார்த்தால் நாம் இருவரும் காதலிக்கமலே இருப்பது நல்லது என்பதுதான் என் கருத்து என்ன சொல்லுகிறாய் நீ ? என்றேன்.

அவள் தலையை குனிந்து இருந்தாள்.என் கண்களை பார்க்கவில்லை.ஏதும் பேசவும் இல்லை.

பார் நான் என் நிலைமையை மற்றும் நாம் காதலித்தால் என்ன ஆகும் என்பதையும் விளக்கிவிட்டேன். இப்பொது சொல் இதற்க்கு பிறகும் நாம் காதலிக்க வேண்டுமா? .

அதற்கு அவள் -------- என்றாள்.

(வேண்டுகோள்--காதலை விரும்புகிறவர்கள் ----------- இந்த இடத்தில "ஆமாம்" போட்டு படித்து என்னை திட்டுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்)


இதை அனுப்பிய தமிழுலக நண்பர் கணேஷ் மூர்த்திக்கு நிரம்ப நன்றி!!!

No comments: