Pages

Monday, May 10, 2010

"அன்னையர் தினம்"

"அன்னையர் தினம்"


















"தாயிற்சிறந்த கோவிலுமில்லை....." என்ற வைரவரிகள் தமிழ் கூறும் நல்லுலகில் பவனி வரும் இரத்தினச சுருக்கமான வார்த்தை. ஒரு சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக..இப்படிப் பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது; இப்படிப்பட்ட அன்னையைக் கெளரவிக்கும் வகையில் தற்போது உலகெங்கும் "அன்னையர் தினம் " அகிலமெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்தவர் பற்றி நாம் சற்றுத் தெரிந்து கொள்வோமா? எந்தச் செய்திக்கும் ஒரு மூலம் இருக்குமில்லையா? அந்த வகையில் அன்னையர் தினம் முகிழ்க்கக் காரணகர்த்தாவாக இருந்தவரை அறிவது சற்றுப் பொருத்தமாக இருக்கும் இல்லையா?

அன்னையர் தினம் தான் பழங்காலத்தில் தாய்க் கடவுளுக்கு வசந்தவிழாவாகக் கொண்டாடப்பெற்றதாகவரலாற்று ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். அன்றைய கிரேக்கப் பேரரசன் ரோனஸ்(Cronus) மனைவியும் கடவுளின் அன்னையாகவும் மக்களால் வணங்கப்பெற்ற ரேயா (Rhea) வுக்கு விழாவெடுத்தான். மக்கள் இந்தவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.
இதே காலகட்டத்தில், அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பாக ரோமப் பேரரசில் கடவுளின் அன்னையாகக் கருதி வணங்கப்பெற்ற சைப்ளி(Cybele)க்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பெற்ற வரலாறும் உண்டு. மூன்று நாட்கள் கொண்டாடப்பட்ட இந்தப் பெருவிழாவிற்கு ஹிலாரியா(Hilaria) விழா என்றும் மார்ச் மாதத்தில் 15 முதல் 18ம் தேதி வரை என்று ஆண்டுதோறும் கொண்டாடியதற்கான சான்றுகள் உள்ளன.

16ம் நூற்றாண்டில் கிரீஸ் நாட்டில்தான் "MOTHERING SUNDAY" என்ற நாள் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்ட்டர் வரும் மாதத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் தாயை நினைவு கூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் முகிழ்த்த அன்னையர் தினம்தான் இன்றைக்கு உலகெங்கும் கொண்டாடக் காரணமாக அமைந்தது எனலாம்.
1600களில் இங்கிலாந்தில் இடம்விட்டு இடம்பெயர்ந்து வேலைசெய்து வந்தனர். இவர்கள் தாங்கள் வேலை செய்யும் எஜமானர்கள் எங்குவேலை செய்யச் சொல்லுகிறார்களோ அங்கேயே தங்கி வேலை பார்ப்பதும், குடும்பத்தை ஓரிடத்திலுமாய் வைத்துவிட்டுச் செல்லுவதையும் வழக்கமாய்க் கொண்டிருந்தனர்.
அப்படி வேலையில் இருப்பவர்களுக்கு வருடாந்திர விடுமுறை போல இந்த மதரிங் சண்டேக்கு விடுப்பு அளித்து எஜமானர்கள் அனுப்புவது வழக்கம். அப்படிச் செல்லுபவர்கள் ஒருவித விசேசமான கேக் ( அதையும் மதரிங் கேக் என்றே குறிப்பிட்டார்கள்.) தயாரித்தோ அல்லது வங்கிச்சென்றோ தமது அன்னையரோடு விடுமுறையைக் கழித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் அன்னையர் தினம் கொண்டாடப்படவேண்டும் என்று 1872ல் ஜூலியா வார்டு ஹோவ் (Julia Ward Howe )முதன் முதலில் பாஸ்டனில் ஒரு பெருந்திரளான கூட்டத்தைக் கூட்டினார். திருமதி ஹோவ், குடும்பத்தில் அயராது உழைக்கும் அன்னைக்கு ஒருநாளை அமைதியாகக் கழிக்க அன்னையர் தினம் என்று ஒருநாளை அனுசரிக்க வேண்டும் என்று அக் கூட்டத்தில் பெருங்குரலெடுத்துக் கூறினாலும் அவருக்குப் பின் அதை எடுத்துச் செல்ல யாரும் முன்வரவில்லை.
"அன்னா மரியா ரீவிஸ் ஜார்விஸ்" என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வர்ஜினியா மாநிலத்தில் கிரா·ப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்தவர்.
இவர் கிறிஸ்தவ பாதிரியார் அருட்திரு.ரீவிஸ் மகளாவார். 1852ல் அன்னா, கிரான்வில்லி இ ஜார்விஸ் என்பாரை மணம் புரிந்து மேற்கு வர்ஜீனியாவின் பிலிப்பியிலிருந்து கிராப்டனில் குடியேறினார். பணிபுரியும் பெண்களுக்கான நலச் சங்கங்களை துவக்கினார்; பணிபுரியும் பெண்கள் டி.பி.நோயால் பாதிக்கப்பட்ட போது அவர்களுடைய குடும்பங்களில் உதவி செய்ய இந்தச் சங்கங்கள் பணிப்பெண்களை வேலைக்கமர்த்தி உதவி செய்தது.
பாட்டிலில் வினியோகிக்கப்படும் பால் மற்றும் உணவு வகைகளை பரிசோதித்து அளிக்கும் பொறுப்பையும் இந்தச் சங்கம் ஏற்றுக்கொண்டு ஆற்றிய சேவைகளைக் கண்ட அண்டை நகரங்களான ·பெட்டர்மேன், ப்ருண்ட்டிடவுன் பிலிப்பி, மற்றும் வெப்ஸ்டர் போன்ற நகரங்களும் சங்கங்களை துவக்கிட விருப்பம் தெரிவிக்க அன்னா சுகாதரக் குறைவான சுற்றுச்சூழற் கேடுகள் மறைய அங்கெல்லாம் சென்று வழிநடத்தினார். தன்னுடைய குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்துபோக நேரிட்ட போதிலும் மனம் தளராது பணிபுரிந்தார்.
பால்டிமோர் நகரிலிருந்து ஒஹையோ வரையிலான இருப்புப்பாதை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது உள்நாட்டுக் கலகம் மூள இந்தச் சங்கங்களின் பணி இரட்டிப்பானது. யுத்தத்தில் காயம்பட்ட வீரர்களை சங்க கட்டிடத்தில் கொண்டுவந்து வைத்து மருந்திட்டு, உணவு,உடையளித்து காக்கும் பணியினை சங்கங்கள் மூலமாக அன்னா செய்தார்.

அன்று யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் பலியாயினர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபக்கமும் சிதறிப்போயினர். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் அவர்களின் நல்வாழ்க்கைக்கும் சமாதானத்திற்கும் அயராது பாடுபட்டவர்தான் "அன்னா ஜார்விஸ்". அவரின் பார்வையற்ற மகளுடன் தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904ல் மறைந்தார். அவருடைய 72வது வயதைக் குறிக்கும் வகையில் பிலடெல்பியாவின் வெஸ்ட் லாரல் ஹில்லில் புதை(விதை)க்கப்பட்டபோது கிராப்டன் ஆன்ரூஸ் சர்ச்சில் 72 முறை ஆலய மணி ஒலித்தது! மகள் ஜார்விஸ் முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1907ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார்.
1908ம் ஆண்டு மே 10ம்நாள் பிலடெல்பியா அரங்கில் 5,000 பேர் அமரக்கூடிய அரங்கில் 15,000 பேர்கள் திரண்ட கூட்டத்தில் ஒருமணிநேரம் பத்துநிமிடங்கள் ஜார்விஸ் அன்னையர் தின உரை நிகழ்த்தினார்! அதனைத் தொடர்ந்து அன்னையர் தினக் கமிட்டி ஒன்றை அங்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்! அந்த அமைப்பு உலக அளவில் இதன் நோக்கத்தை எடுத்துச் செல்லும் என்று அறிவித்தார்!
ஜார்விஸ் அம்மையார் எதிர்பார்த்ததைவிட 1909ம் ஆண்டே அமெரிக்காவின் 45 மாநிலங்களிலும் போர்ட்டோ ரிக்கோ, ஹாவாய், கனடா, மற்றும் மெக்சிகோவில் அன்னையர் தினத்தை விசேடப் பிரார்த்தனைகள் வெள்ளை மற்றும் சிவப்பு துணிகளை அணிந்து சிறப்பாகக் கொண்டாடினர்!

1910ம் ஆண்டு மேற்கு வர்ஜீனியா ஆளுநர் வில்லியம் இ கிளாஸ்காக் ஏப்ரல் 26ம்தேதி அன்னையர் தினமாக அறிவிப்பை வெளியிட்டார்!அமெரிக்க மாநிலங்களவை உறுப்பினர்களான அலபாமா ஹெ·ப்ளின், டெக்ஸாஸ் செப்பார்டு ஆகிய இருவரும் இணைந்து மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அறிவிக்கக்கோரும் சட்ட முன்வடிவைச் சமர்ப்பித்தனர்!
1913ம் ஆண்டு தன் பணி நிமித்தம் மகள் ஜார்விஸ் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார்.
கஷ்ட்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும்; எல்லோர் இல்லங்களிலும் அன்றையதினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

ஆனால், ஜார்விஸ் திருப்தி அடையவில்லை; ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமென அமெரிக்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

1914ம் ஆண்டு அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிறை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதனையே கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல ஆப்கானிஸ்தானத்திலிருந்து கோஸ்டாரிகா வரை 46 நாடுகள் இதே நாளில் "அன்னையர் தினம்" என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமனநிறைவடையவில்லை; உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு அடுத்த வித்தினை இட்டார்.

எதையும் வியாபாரமாக்கி பணம் பண்ணும் அமைப்பு "அன்னையர் தினம்" அன்று அன்னையின் படம் ஒன்றைப் பொறித்து கொடியொன்றை விற்று காசு....ஸாரி...டாலர்கள் பார்த்தது. வெகுண்டெழுந்தார் ஜார்விஸ்! 1923ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். என்னுடைய நோக்கம் அன்னையர் தினம்"செண்டிமெண்ட்" நாளாக இருக்கவேண்டுமேயல்லாமல் டாலர் தேற்றுகிற நாளாக இருக்கக்கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடைவித்திக்க வேண்டும் என்று வாதாடி வென்றார்.
உலகம் முழுக்க "அன்னையர் தினம்" அனுசரிக்கப்படவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாக பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.


"ஒரு அன்னையின் அன்பு ஒவ்வொருநாளும் புதிதாகவே பூக்கும் என்ற ஜார்விஸ் இப்படிக் குறிப்பிடுகிறார். இந்தநாளில் நம்மைப் பெற்றெடுத்த தாய்க்கு இணையற்ற அன்பைப் பொழிய பிரத்யேகமான தீர்மானங்களை நமக்கு நாமே நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும்! இனிய வார்த்தைகள் மூலம், அன்பளிப்புகள் மூலம், நம் அபிமானத்தின் மூலம், இன்னும் எந்தெந்த வழிகளில் எல்லாம் நம் அன்பை வெளிப்படுத்துவதன் மூலம், அவளைச் சிறப்பியுங்கள்; அன்னையின் இதயம் சந்தோசத்தால் ஒவ்வொருநாளும் நிரம்பிவழியச் செய்யுங்கள்! குறிப்பாக அன்னையர் தினத்தன்று அவளை விசேடமாக கவனியுங்கள்! அன்னையின் அருகில் இல்லாத சூழலா, அடிக்கடி மடலிடுங்கள்! அதுமட்டுமல்ல அவளிடமுள்ள விசேட குணத்தைச் சுட்டிக்காட்டிஅவளை நீங்கள் எவ்வாறெல்லாம் நேசிக்கிறீர்கள் என்று உணர்த்துங்கள். ஈன்ற பொழுது மகிழ்ந்ததைக் காட்டிலும் அவளை உங்கள் செயல் மகிழ்விக்கச் செய்வதாக இருக்கவேண்டும் என்கிறார்!
"அன்னையர் தினம்" மூலம் தெரியாவிட்டாலும், இன்று அகிலம் அன்னையர் தினத்தை அவரவர் இஷ்ட்டத்துக்கு கொண்டாடி மகிழ்கின்ற நாளாகத் திகழ்கிறது. சிங்கப்பூரில் சீனிவாசப் பெருமாள் கோவிலில் மகாலட்சுமிக்கு விசேச வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது இந்த தினத்தில் இன்றும் நடைபெறுவதைக் காணலாம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் போல அன்னையர் தினத்தை வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் என்று கொண்டாடத் தலைப்பட்டுவிட்டனர்.
கணினியில் தேடுபொறியில் ஆங்கிலத்தில் Mothers day என்று தேடினால் 20,000,000 வலைப்பக்கங்கள் பலவிதமான வியாபார நுணுக்கங்களோடு மிளிர்வதைக் காணலாம்; அன்னையரை வாழ்த்த பூங்கொத்து அனுப்ப! வாழ்த்து அட்டைகள்! அன்னையை அலங்கரிக்க எங்கள் வைர வைடூரிய நகைகளை வாங்கிட! கைக்கெடிகாரம், ஒப்பனைபொருட்கள் பெட்டி... உங்கள் அன்னையை மகிழ்விக்க எங்கள் பரிசுக் கூடைகளை இன்றே வாங்கி அனுப்புங்கள் என்று விதவிதமாக வலையக அங்காடிகள் வகைவகையாய் கண்களைப் பறிக்கும் வண்ணம் கடைவிரித்துள்ளனர்! அன்னையின் உருவப்படத்தைப் போட்டு வணிகம் செய்தவர்களுக்கெதிராக வழக்குத் தொடுத்து வெற்றிகண்ட ஜார்விஸ் அவர்களையும் இந்த நேரத்தில் எண்ணிப்பார்க்கிறோம்.

எகிப்து மற்றும் லெபனானில் மார்ச் 21ம்தேதியும், அங்கேரி, போர்ச்சுகல், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் நாடுகளில் மே மாதத்தின் முதல் ஞாயிறு அன்றும் பிரேசில், ஜெர்மனி, ஹாங்காங், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், தைவான், அமெரிக்கா, கனடா, சுலோவோகியா, அல்பேனியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறு அன்று கொண்டாடத் தலைப்பட்டதும் ஒவ்வோர் ஆண்டும் இந்தப்பட்டியலில் புதிதுபுதிதாக இடம்பிடித்து இன்றைக்கு உலகம் முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடும் நிலைக்கு வந்துவிட்டது.
அம்மா என்று அழைக்காத உயிர் ஏதும் உண்டா? அம்மா என்றால் அன்பு என்றும் தாயில்லாமல் நானில்லை; தானே எவரும் பிறந்ததில்லை; எனக்கொரு தாய் இருக்கின்றாள்; என்றும் என்னைக் காக்கின்றாள்...போன்ற திரைப்படப் பாடல்கள் அன்னையின் புகழை வீதிகளில் முழக்கினாலும் ஆதரவற்றோர் இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் உள்ளம் உடைந்து நித்தம் கண்ணீர் விடும் அன்னையர்கள் நாளும் பெருகுவதும் ஒருபுறம் வேதனை தருவதும் தவிற்க இயலாததாகிவருகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் மூலமாகவாவது ஒரு சில அன்னையர்கள் தன் பிள்ளைகளோடு வசிக்கும் பேறு கிடைக்கப் பிரார்த்திப்போம்.

நாமும் "மூலம்" அறிந்து கொண்டோம்; வாயார மனமார வாழ்த்திப் போற்றுவோம் நம் "அன்னையை!"

-நன்றி ஆல்பர்ட், விஸ்கான்சின், அமெரிக்கா.

No comments: